EICMA 2026-ல் அறிமுகமானது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750: மாஸ் என்ஜின், வேற லெவல் வசதிகள்!
ஒரு சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் அம்சங்கள் நிறையவே உள்ளன
EICMA 2026 வாகன கண்காட்சியில் தனது முதன்மையான ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் பைக்கான ஹிமாலயன் 750 மாடலை அதிகாரப்பூர்வமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இதன் இந்திய விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பைக்கின் முழு ஸ்பெசிஃபிகேஷன் விவரங்களையும் அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
பெரிய என்ஜின், கூடுதல் பவர், அதிக டார்க்
நிறுவனத்தின் வெற்றிகரமான 650 cc பேரலல்-ட்வின் என்ஜினுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய என்ஜினில் 90 சதவீத பாகங்கள் முற்றிலும் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. அதிக ஸ்ட்ரோக், உயர்ந்த வால்வ் லிப்ட், மெக்னீசியம் கவர்கள், சிறிய ஃபின்கள், பிளேட்டட் சிலிண்டர் போர் என பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த 743 cc என்ஜின் 7,000 rpm-ல் 55 PS பவரையும், 5,000 rpm-ல் 63 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. தற்போது உற்பத்தியில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலேயே இதுதான் அதிக பவர் கொண்ட என்ஜினாகும். வெறும் 3,500 rpm-லேயே இதில் 90 சதவீத பீக் டார்க் கிடைத்துவிடுவதால், இதன் லோ மற்றும் மிட்-ரேஞ்ச் பெர்ஃபார்மன்ஸ் வேற லெவலில் இருக்கும் என ராயல் என்ஃபீல்டு உறுதியளிக்கிறது.
இவ்வளவு பெரிய என்ஜினாக இருந்தாலும், முந்தைய 650cc என்ஜினின் அதே எடையில் இதைக் கொண்டு வந்திருப்பதுதான் இதில் இருக்கும் மிகப்பெரிய ஹைலைட். இதற்காக மெக்னீசியம் என்ஜின் கவர்கள், சிங்கிள்-போர் த்ராட்டில் பாடி மற்றும் 2-இன்-1 எக்சாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸும் இதில் இடம்பெற்றுள்ளது.
முக்கிய விவரங்கள்:
- என்ஜின்: 743 cc, ஏர் மற்றும் ஆயில்-கூல்டு
- பவர்: 55 PS @ 7,000 rpm
- டார்க்: 63 Nm @ 5,000 rpm
- ஐடில் RPM: 1,300 rpm
- கம்ப்ரஷன் ரேஷியோ: 9:5:1
- கியர்பாக்ஸ்: 6-ஸ்பீடு
சேஸி மற்றும் சஸ்பென்ஷன் கட்டமைப்பு
ஹிமாலயன் 750 மாடலில் முற்றிலும் புதிய ஸ்டீல் ஃபிரேம், முன்பக்கத்தில் 43 mm ஷோவா இன்வெர்ட்டட் ஃபோர்க் மற்றும் பின்பக்கத்தில் ஷோவா லிங்க்டு மோனோஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க சஸ்பென்ஷனை கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்டிற்கும், பின்பக்க சஸ்பென்ஷனை ப்ரீலோட் மற்றும் ரீபவுண்டிற்கும் ஏற்றவாறு முழுமையாக அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். இந்த பைக்கில் முன்பக்கம் 190 mm மற்றும் பின்பக்கம் 175 mm வீல் டிராவல் வழங்கப்பட்டுள்ளது. இது ஹிமாலயன் 450 பைக்கின் 200 mm வீல் டிராவலை விட சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பக்கம் 19-இன்ச் மற்றும் பின்பக்கம் 17-இன்ச் வீல் அமைப்பில் இந்த பைக் வலம் வரவுள்ளது. டியூப்லெஸ் ஸ்போக் வீல் வேரியண்ட்டில் விரெடெஸ்டீன் சென்டாரோ XR பிளாக் பேட்டர்ன் டயர்களும் (முன்பக்கம் 110-செக்ஷன், பின்பக்கம் 150-செக்ஷன்), அலாய் வீல் வேரியண்ட்டில் சியட் கிராஸ்ராட் RT டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. 224 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ளதால், இதை மிகவும் எடை குறைவான அட்வென்ச்சர் பைக் என்று சொல்லிவிட முடியாது; சொல்லப்போனால் இது ஹிமாலயன் 450 மாடலை விட 30 கிலோ கூடுதல் எடை கொண்டது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 mm ஆகவும், சீட் உயரம் 815 mm ஆகவும் உள்ளது. பிரேக்கிங் வசதியை வலுப்படுத்த முன்பக்கத்தில் 280 mm ட்வின் டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 255 mm சிங்கிள் டிஸ்க் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய விவரங்கள்:
- பிரண்ட் வீல் டிராவல்: 190 mm
- ரியர் வீல் டிராவல்: 175 mm
- பிரண்ட் டயர் அளவு: 110/80-R19
- ரியர் டயர் அளவு: 150/70-R17
- சீட் உயரம்: 815 mm
- கிரவுண்ட் கிளியரன்ஸ்: 205 mm
- கெர்ப் எடை: 224 கிலோ
- முன்பக்க பிரேக்: 280 mm ட்வின் டிஸ்க்குகள்
- பின்பக்க பிரேக்: 255 mm சிங்கிள் டிஸ்க்
- ஃபியூயல் டேங்க் கொள்ளளவு: 17.8 லிட்டர்
தோற்றம் எப்படி இருக்கிறது?
ஹிமாலயன் 750 தனது பிரம்மாண்ட உடல் அமைப்பால் சாலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் கம்பீரமான ADV தோற்றத்தைக் கொண்டுள்ளது. வட்ட வடிவ LED ஹெட்லைட், உயரமான விண்ட்ஸ்கிரீன், தடிமனான பிரண்ட் சஸ்பென்ஷன் மற்றும் முரட்டுத்தனமான மெட்டல் ஃபியூயல் டேங்க் ஆகியவை பைக்கிற்கு அக்ரஸிவ் லுக்கை தருகின்றன. அட்வென்ச்சர் பயணங்களுக்கு வசதியாக நேரான ஹேண்டில்பார், ஸ்பிளிட்-சீட் செட்டப் மற்றும் சற்று உயரமாக பொருத்தப்பட்ட எக்சாஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக் அண்டார்டிக் சில்வர், சைபீரியா ஒயிட், ஆஸ்டெக் கிரீன், வைக்கிங் ப்ரான்ஸ் மற்றும் டெக்டோனிக் பிளாக் என 5 அசத்தலான வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
தொழில்நுட்ப வசதிகளின் பட்டியல்
ஹிமாலயன் 450 பைக்கில் இருப்பதைப் போன்ற 4-இன்ச் TFT கன்சோல் இதிலும் பிரதான அம்சமாக இடம்பெற்றுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, கூகுள் மேப்ஸ் மிரரிங், கால்/SMS அலெர்ட்கள் மற்றும் OTA அப்டேட்கள் போன்ற வசதிகள் உள்ளன. ரைடு-பை-வயர் த்ராட்டில் வசதியுடன் வரும் இந்த பைக்கில் ரோடு, ரோடு ஸ்போர்ட், ரெயின், டிரெயில் மற்றும் கஸ்டம் என ஐந்து ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர க்ரூஸ் கண்ட்ரோல், லோ, மீடியம், ஹை மற்றும் ஆஃப் ஆப்ஷன்களுடன் கூடிய லீன் சென்சிட்டிவ் ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் டூயல் சேனல் கார்னரிங் ABS ஆகியவையும் இதில் உள்ளன. முழுமையான LED விளக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இரண்டு USB Type-C சார்ஜிங் போர்ட்கள் மற்றும் செல்ஃப்-கேனசலிங் இண்டிகேட்டர்கள் போன்ற நவீன அம்சங்களும் பைக்கில் நிரம்பியுள்ளன.
வேரியண்ட்கள்
டாப் (அண்டார்டிக் சில்வர்), ஸ்போக் வீல்ஸ் (சைபீரியா ஒயிட், வைக்கிங் ப்ரான்ஸ்) மற்றும் அலாய் வீல்ஸ் (ஆஸ்டெக் கிரீன், டெக்டோனிக் பிளாக்) என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் இந்த பைக் கிடைக்கவுள்ளது. வீல் அமைப்பு மற்றும் வண்ணங்களைத் தவிர, ஸ்போக் மற்றும் அலாய் வீல் வேரியண்ட்களில் மற்ற அனைத்து வசதிகளும் சமமாகவே உள்ளன. அதேசமயம் டாப் வேரியண்ட்டான அண்டார்டிக் சில்வர் மாடலில் கிவி நிறுவனத்தின் டூரிங் அக்சஸரீஸ்கள் ஸ்டாண்டர்டாகவே வழங்கப்படுகின்றன. இதில் பேனியர்கள், டாப்-பாக்ஸ், ஹேண்ட்கார்டுகள் மற்றும் ஹீட்டட் கிரிப்கள் ஆகியவை அடங்கும். இந்த அக்சஸரீஸ்களை மற்ற வேரியண்ட் வாடிக்கையாளர்களும் விருப்பப்பட்டால் தனியாக வாங்கிக் கொள்ள முடியும்.
பைக்தேக்கோவின் கருத்து...
காகிதத்தில் இருக்கும் விவரங்களின்படி பார்த்தால் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. பவர்புல்லான புதிய என்ஜின், நவீன பாகங்கள் மற்றும் நீண்ட தூர டூரிங் பயணங்களுக்குத் தேவையான ஏராளமான பிரீமியம் வசதிகள் இதில் உள்ளன. குறைவான வீல் டிராவல், சிறிய பிரண்ட் வீல் மற்றும் குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, ஹிமாலயன் 450 போல இதை அதீத ஆஃப்-ரோடு பைக்காக உருவாக்க ராயல் என்ஃபீல்டு முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மாறாக, ஆஃப்-ரோடு திறனும் கொண்ட, நெடுஞ்சாலை பயணங்களை எளிதாகக் கையாளக்கூடிய பவர்புல் ரோடு-ஃபோக்கஸ்டு அட்வென்ச்சர் டூரராகவே இது களமிறங்குகிறது.
சர்வதேச அளவில் வெளியாகிவிட்ட இந்த பைக் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் நடைபெறும் MotoVerse நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் களமிறங்கியதும் ஹோண்டா NX500 மற்றும் கவாஸாகி வெர்சிஸ் 650 போன்ற முன்னணி பைக்குகளுக்கு இது நேரடிப் போட்டியாக அமையும்.
