குடும்பத்துக்கேற்ற சூப்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! புதிய E-ஸ்ப்ரின்டோ G1 அறிமுகம்!
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த பிரிவில் மிக உயர்ந்த ஐடிசி...

மின்சார வாகன உற்பத்தியாளரான E-ஸ்ப்ரின்டோ (E-Sprinto) குடும்ப பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட தனது புதிய 'G1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், பேட்டரி விபரம் மற்றும் விலை குறித்த அனைத்துத் தகவல்களையும் கீழே விரிவாகப் பார்ப்போம்:
வடிவமைப்பு

பாரம்பரிய குடும்ப ஸ்கூட்டர்களின் தோற்றத்தைக் கொண்டுள்ள இந்த மாடலில், க்ரோம் பூச்சுகளுடன் கூடிய பருமனான முன்பக்க ஏப்ரான் (Apron), ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்ட எல்.இ.டி ஹெட்லைட் மற்றும் வட்டவடிவ க்ரோம் ரியர்வியூ கண்ணாடிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவை ஸ்கூட்டருக்கு ஒரு 'கிளாசி' ரெட்ரோ லேக்கை தருகின்றன. ஸ்கூட்டரின் பின்புறம் நீட்டிக்கப்பட்ட சைடு பேனல்களுடன் கூடிய நேர்த்தியான டிசைனைக் கொண்டுள்ளதால், பிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிடம் இருந்து இது தனித்துவமாக வேறுபட்டுத் தெரிகிறது.
இந்த ஸ்கூட்டர் ஹொரைசன் ப்ளூ, சார்கோல் பிளாக், பைன் கிரீன் மற்றும் ஸ்லேட் கிரே ஆகிய 4 தனித்துவமான வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
பேட்டரி, மோட்டார் மற்றும் விலை விவரங்கள்

|
வேரியன்ட்கள் |
விலை |
|
2.0 kWh |
ரூ. 89,999 |
|
2.5 kWh |
ரூ. 94,999 |
|
3.0 kWh |
ரூ. 99,999 |
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி விலை
E-ஸ்ப்ரின்டோ G1 மாடல் 2 kWh, 2.5 kWh மற்றும் 3 kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்ச பேட்டரி திறன் கொண்ட 3 kWh டாப் வேரியன்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கி.மீ (IDC) ரேஞ்ச் தரும் என்றும், மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 2.0 kWh மற்றும் 2.5 kWh வேரியன்ட்கள் முறையே 80 கி.மீ மற்றும் 100 கி.மீ ரேஞ்ச் வழங்குகின்றன. அனைத்து பேட்டரி வேரியன்ட்களையும் முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4 முதல் 4.5 மணிநேரம் மட்டுமே ஆகும்.
இதில் IP67 தரச்சான்று பெற்ற, கழற்றி மாட்டக்கூடிய LFP (லித்தியம் அயர்ன் பாஸ்பேட்) பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 1.5 kW பீக் பவர் மற்றும் 82 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.2 kW ஹப் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 5 ஆண்டுகள் அல்லது 60,000 கி.மீ (எது முதலில் வருகிறதோ அது) வரை நிறுவனத்தின் வாரண்டி வழங்கப்படுகிறது.
அம்சங்கள்

E-ஸ்ப்ரின்டோ G1 ஸ்கூட்டரில் வேகம், பயணித்த தூரம் உள்ளிட்ட அனைத்து முக்கியத் தகவல்களையும் காட்டும் டிஜிட்டல் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. பயணத்தின்போதே செல்போன்களை சார்ஜ் செய்ய ஏப்ரான் பகுதியில் யூ.எஸ்.பி (USB) சார்ஜர் வசதியும் உள்ளது.
இதில் எக்கோ (Eco), சிட்டி (City), மற்றும் ஸ்போர்ட் (Sport) என 3 ரைடிங் மோடுகள் உள்ளன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் மோடுக்கு ஏற்ப ஸ்கூட்டரின் பவர் மாறுபடும். எக்கோ மோடில் மணிக்கு 28 கி.மீ வேகத்திலும், சிட்டி மோடில் 38 கி.மீ வேகத்திலும், ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்திலும் பயணிக்க முடியும். இதுதவிர, குறுகிய பார்க்கிங் இடங்களில் ஸ்கூட்டரை எளிதாகப் பின்னால் எடுக்க உதவும் 'ரிவர்ஸ் மோட்' (Reverse Mode) வசதியும் இதில் உள்ளது.
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, சிறப்பான பிரேக்கிங் அனுபவத்திற்காக CBS சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்டி-தெஃப்ட் அலாரம், வாகனத்தைக் கண்டறிய உதவும் 'ஃபைன்ட் மை வெஹிக்கிள்' போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தால் வண்டி இயங்காத வண்ணம் 'சைடு-ஸ்டாண்ட் கட்ஆஃப் சென்சார்' மற்றும் தூரத்திலிருந்தே லாக்/அன்லாக் செய்யக்கூடிய கீஃபாப் (Keyfob) வசதியுடன் கூடிய சாவி வழங்கப்படுகிறது.
விருப்பப்பட்டால் சந்தா அடிப்படையிலான நேவிகேஷன் வசதியையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மெக்கானிக்கல் அம்சங்கள்

இந்த ஸ்கூட்டரின் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டிலும் 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனை பொறுத்தவரை, முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் 790 மி.மீ சீட் உயரம் அனைத்து தரப்பினரும் எளிதாக அமர்ந்து ஓட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற வகையிலான 165 மி.மீ கிரவுண்ட் கிளீரன்ஸ் இதில் வழங்கப்பட்டுள்ளது. சீட்டுக்கு அடியில் 28 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உள்ளதால், தினசரி பொருட்கள் மற்றும் ஒரு ஃபுல்-ஃபேஸ் ஹெல்மெட்டை தாராளமாக வைக்க முடியும்.
பைக்தேக்கோவின் பார்வையில்
E-ஸ்ப்ரின்டோ பிராண்டின் குடும்ப பயன்பாட்டு ஸ்கூட்டர் வரிசையில் இணையும் 3-வது மாடல் இந்த G1 ஆகும். இதன் மூலம் தனிநபர் பயன்பாட்டிற்கான (B2C) சந்தையில் தனது பங்கை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு ஏற்ற பயனுள்ள வசதிகளும், சிறப்பான IDC ரேஞ்சும் இதன் முக்கிய பல பலங்கள் ஆகும். இந்த ஸ்கூட்டருக்கான விநியோகம் வரும் ஜனவரி 2027 முதல் தொடங்கவுள்ளது. இது சந்தையில் கொமகி XR7, ஒகினாவா ப்ரைஸ்புரோ மற்றும் லெக்ட்ரிக் எண்டியூரோ போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும்.